What is new?‎ > ‎

சாதனைகளைச் சுழற்றிய புயல்!!!

posted Aug 5, 2010, 6:34 AM by Unknown user
ஆக்ரோஷம், குறுகுறு பார்வை, குழந்தைச் சிரிப்பு... கிரிக்கெட் மைதானத்தில் களம் இறங்கிவிட்டால் முத்தையா முரளீதரன் என்கிற கறுப்பு மின்னல் அடிக்கடி வெளிப்படுத்தும் உணர்வுகள் இவைதாம்.  கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இலங்கை அணி எப்போதுமே ஓர் ஆச்சரியத்துக்குரிய அணி. அதுபோலவே அந்த அணி வீரர் முரளீதரனும். இலங்கை அணிக்கு முரளீதரன் ஒரு துருப்புச்சீட்டு. எதிரணியை குறிப்பிட்ட ரன்களில் கட்டுப்படுத்த வேண்டும் என்றாலோ, குறிப்பிட்ட ஒரு விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்றாலோ அந்த நேரத்தில்  முரளீதரன் பந்துவீச வருவார்.  இலங்கையில் கண்டியில் பிறந்த முரளீதரன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 1992-ல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். சுமார் 18 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுகளை வீழ்த்தி இப்போது இமாலயச் சாதனை படைத்துள்ளார். இதில் 67 முறை ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளையும், 22 முறை 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஒருநாள் போட்டிகளிலும் அதிக விக்கெட்டை வீழ்த்தி முதலிடத்தில் இருப்பது முரளீதரனே. இந்திய அணிக்கு எதிராக 1993-ல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியைத் தொடங்கிய முரளீதரன் மொத்தம் 337 போட்டிகளில் 515 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளார்.  டெஸ்ட் போட்டி விக்கெட் வேட்டையில் ஆஸ்திரேலியாவின் வார்னேவுக்கும்  முரளீதரனுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவியது. 2007 டிசம்பரிலேயே  வார்னேவை முரளீதரன் முந்திவிட்டாலும், தோள்பட்டை காயம் காரணமாக சிறிது  காலம் தொடர்ச்சியாக விளையாடாமல் இருந்ததால் வார்னே முந்தினார். பின்னர்  இருவரும் போட்டி போட்டு மாறி மாறி முதலிடம் பெற்றனர்.  708 விக்கெட்டுகளோடு வார்னே ஓய்வு பெற்றதையடுத்து, முரளீதரன் இப்போது 800  விக்கெட் என்ற எட்ட முடியாத இடத்தை எட்டிப் பிடித்துள்ளார்.  ஏராளமான சாதனைகளுக்குச் சொந்தக்காரரான முரளீதரனுக்கு கிரிக்கெட்டின் பைபிளாக போற்றப்படும் விஸ்டன் இதழ் தலைசிறந்த டெஸ்ட் பௌலர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.  முரளீதரனின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்றம் மட்டுமன்றி இறக்கமும் உண்டு. இவரது "பந்துவீச்சு ஸ்டைல்' பலமுறை அம்பயர்களால் சர்ச்சைக்குரியதாக்கப்பட்டுள்ளது. பின்னர், ஆய்வுகளின் முடிவில் அந்த சந்தேகங்கள் தீர்ந்து முரளீதரனின் பந்துவீச்சு முறையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அங்கீகரித்துள்ளது.  தமிழரான முரளீதரன், சுமார் 25 ஆண்டு காலம் இனச் சண்டை நீடித்த இலங்கையில், அந்த நாட்டின் தேசிய அணியில் இடம்பெற்றதே ஒரு சாதனை. அதுவும் 18 ஆண்டு காலம் அனைத்து கேப்டன்களும் விரும்பிய ஒரு வீரராக வலம் வருவது முரளீதரனின் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம். முரளீதரனின் பந்துவீச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், மைதானத்தில் கண்ணியமான நடத்தை, எதிரணி வீரர்களுடன் நல்லுறவு, பெருந்தன்மை என முரளீதரன் அனைவரும் விரும்பும் வீரர்.  மணிக்கட்டையும், விரல்களையும் ஒருசேர சுழற்றி முரளீதரன் வீசும் "தூஸ்ரா' பந்துவீச்சு எதிரணி வீரர்களை கதிகலங்கச் செய்யும். பேட்ஸ்மேன்களும், வேகப்பந்து வீச்சாளர்களும் ஆதிக்கம் செலுத்திய கிரிக்கெட்டை தனது சுழல் ஜாலத்தால் ஆக்கிரமித்தவர் முரளீதரன். வார்னேவுக்கும் இதில் முக்கிய பங்கு உண்டு. வார்னே ஒரு  ஓவரில் நான்கு பந்துகளை ஒரே மாதிரி வீசுகிறார் என்றால், ஐந்தாவது பந்தில் விக்கெட்டை குறிவைக்கிறார் என்று அர்த்தம். ஆனால், முரளீதரனின் கையிலிருந்து வரும் ஒவ்வொரு பந்தும் எந்த திசையில் திரும்பும் என்பது எந்தவொரு வீரருக்கும் தெரியாது. சச்சின், லாரா போன்ற கிரிக்கெட் ஜாம்பவான்களை முரளீதரன் தனது பந்துவீச்சால் திணறடித்ததுண்டு. ஆனால், அவர்கள் போன்ற தலைசிறந்த வீரர்களுக்குப் பந்துவீசியதைப் பெருமையாகக் கருதுகிறார் முரளீதரன்.  முரளீதரனின் 800 விக்கெட் சாதனையை மற்றொரு வீரர் முறியடிப்பது மிக சவாலானது. ஏனெனில் முரளீதரனுக்கு அடுத்தபடியாக உள்ள வார்னே 708  விக்கெட்தான் வீழ்த்தியுள்ளார். ஆனால், தனது சாதனையை முறியடிக்க இந்திய வீரர் ஹர்பஜனால் முடியும் என முரளீதரன் கணித்திருக்கிறார்.  ஒரு தமிழனாக, தமிழ்நாட்டு மருமகனாக முரளீதரனின் சாதனை நமக்குப் பெருமையளிக்கிறது. அந்தத் தமிழனின் சாதனையை ஓர் இந்தியன் முறியடிக்க முடியுமென்றால் அதுவும் நமக்குப் பெருமையே.

Comments