What is new?‎ > ‎

'நம்பர்-1' இடத்தை இழந்தார் சேவக் : முதலிடம் பிடித்த சங்ககார

posted Aug 2, 2010, 10:45 AM by Unknown user
டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலில் இந்திய வீரர் சேவக் 'நம்பர்-1' இடத்தை இழந்தார். இவர் இரண்டாவது இடத்துக்கு பின்தங்கினார். இலங்கை கேப்டன் சங்ககரா "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார்.

டெஸ்ட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான புதிய ரேங்கிங் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில், சேவக் (863 புள்ளி), முதலிடத்தில் இருந்து 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். கொழும்பு டெஸ்டில் இரட்டை சதமடித்து அசத்திய இலங்கை கேப்டன் சங்ககரா, 882 புள்ளிகளுடன் 2வது முறையாக 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். முன்னதாக கடந்த 2009ல் முதலிடம் பெற்றார்.

சச்சின் முன்னேற்றம்:

கொழும்பு டெஸ்டில் இரட்டை சதமடித்த இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 6வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு முன்னேறினார். தனது முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய "மிடில்-ஆர்டர்' பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா 60வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீரர்களான காம்பிர் (11வது), லட்சுமண் (15வது), டிராவிட் (19வது) உள்ளிட்டோர் "டாப்-20' வரிசையில் உள்ளனர். இந்திய கேப்டன் தோனி 29வது இடம் பிடித்தார்.

ஆண்டர்சன் எழுச்சி:
பவுலர்களுக்கான ரேங்கிங்கில், தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டைன் 887 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இவரை அடுத்து பாகிஸ்தானின் முகமது ஆசிப் (818 புள்ளி), இலங்கையின் முத்தையா முரளிதரன் (764 புள்ளி) உள்ளனர். இந்தியா சார்பில் ஜாகிர் கான் (8வது), ஹர்பஜன் சிங் (9வது) உள்ளிட்டோர் "டாப்-10' வரிசையில் நீடிக்கின்றனர். பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வேகத்தில் மிரட்டிய ஆண்டர்சன், 4 இடம் முன்னேறி 5வது இடம் பிடித்தார். இந்தியாவின் இஷாந்த் சர்மா 22வது இடம் பிடித்தார்.

Comments